×

முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம்

புதுடெல்லி: முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவான நிலையில், அது 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் பாஜக தலைமை கலக்கம் அடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ‘மோடி அலை’ வீசுவதாவுகம், அதனால் 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மீண்டும் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று பாஜக பிரசாரம் செய்து வருகிறது. பொதுவாக எந்த தேர்தலாக இருந்தாலும், அலை வீசினால் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும். எனினும், 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களை விட இம்முறை வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது.

2019ம் ஆண்டில் 85 தொகுதிகளில் 69.64 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 63.5 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சரிவு ஒரு காரணம் என்றால், பாஜக வசம் உள்ள உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மேலும் வாக்குசதவீதம் குறைந்திருப்பது அக்கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 54.85 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த இடங்களுக்கு 2019ல் 62 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுராவில் கடந்த தேர்தலை காட்டிலும் 12 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 59.6 சதவீதம் (2019ல் 63 சதவீதம்), பீகாரில் 57 சதவீதம் (2019ல் 63 சதவீதம்), ராஜஸ்தானில் 64.07 சதவீதம் (2019ல் 68 சதவீதம்) என்ற அளவில் பதிவாகி உள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு அற்ற மாநிலங்களான கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு குறைந்ததற்கு அரசியல் ஆய்வாளர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, மதம் சார்ந்த பிரச்னைகளை முன்வைத்து ஆதாயம் தேடும் பாஜகவின் முயற்சிகள் பலிக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 370 இடங்களில் வெற்றி பெறும் என கூறி வருகிறது. இது நடக்க வேண்டுமானால், பாஜகவுக்கு அதிக ஆதரவாக மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். ஆனால், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கத் தயாராக இல்லை. இதற்கு காரணம் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், 10 ஆண்டுகால அரசுக்கு எதிரான மனநிலை போன்றவை வாக்குப்பதிவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம்.

முன்னதாக 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், கடந்த தேர்தலை விட 4 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற 88 தொகுதிகளில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் நான்கைந்து இடங்களைத் தவிர மற்ற இடங்களில் குறைந்தபட்ச போட்டியைக் கூட பாஜகவால் கொடுக்க முடியவில்லை.

கடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த முறை பாஜகவுக்கு எதிரான காற்று வீசுகிறது. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகள் பாஜகவுக்கு எதிர்மறையாக மாறலாம். பாஜகவுக்கு ஆதரவாக இருந்த ராஜ்புத், ஜாட், மராட்டிய இனத்தவர்கள் இந்த முறை பாஜகவுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர். அதனால் பாஜகவின் வெற்றி வாய்ப்பை குறையும் என்கின்றனர்.

The post முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு: 2014, 2019 தேர்தல்களை காட்டிலும் குறைந்ததால் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,2014, 2019 ,New Delhi ,2014 ,Modi wave ,Dinakaran ,
× RELATED பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து...